Friday, 28 November 2014

Tamil Kavithai - Enaku Vidai Naane(எனக்கு விடை நானே)

தோற்றமோ மாற்றமோ  நிலைகளோ நியதியோ
தினம் தோன்றும் எண்ணப் பிழைகளோ
என்னவென்று நானறியேன்

என் வார்த்தைகள் என்னுடன் பேசுகின்ற சத்தம் மனதில்
சிறு புன்னகை முகத்தில் பதித்து, மன அலைகளை நிறைத்தேன் விழியில்
பெற்றோர்க்கு புதிதானேன் நண்பர்களுக்கும் புதிரானேன் 
உயிர் தோழிக்கும் கேள்வி குறியானேன், எனக்கு நானே பதிலானேன்


வெறுமை களைந்து , கனவுகள் அணிந்து
புதிய கண்ணோட்டத்தில் அன்றாட செயல்கள் காண
பாதைகள் கண்டேன் -அவை
என்னை வரவேற்று அணைக்கக் கண்டேன்

நல்ல மாற்றங்களால் தினம்
நாட்களை அலங்கரிக்கும்
கலையை கற்றேன்
கவலை மறந்தேன்

வலிகள் என்னை சந்திப்பதுண்டு
சில நேரம் வந்து போகும் தலைவலி போல
சில நட்புகள் தந்து போவதுண்டு
மருந்து போன்ற உடனிருப்பை


உலகம் அழகு வரங்கள் பெரிது –இங்கு
அலைபாயாமல் , அதிகம் யோசிக்காமல்
அமைதியாய் நன்றி சொல்ல
காரணங்கள் கணக்கற்றது நாம் நினைத்தால்

என்னை தேடிவரும் எனக்கான நன்மைகள் தினம்
அவற்றை அனுபவித்துச் செல்வதேயன்றி
என்னை தொலைத்து எதையும் தேட
என்றும் அவசியம் இல்லை உலகில்

விமர்சனங்களை கண்டு சிரிக்கிறேன்
வலிமையை உணர்கிறேன்
பரிந்துரைகள் ஏற்கிறேன் -ஆனால்
என்னை நானே இயக்குகிறேன்

கடவுளில் துணை உண்டு காலத்தின் திட்டம் உண்டு
என்றும் குறையாத அன்பு உண்டு, எதையும் கடக்கும் துணிவு உண்டு
என் நாட்களை அழகாக்குவதன்றி –இங்கு

எனக்கொரு பொறுப்புமில்லை

By, 
CARMEL FELIXIA R

Tamil Kavithai- Pirivugal En Parvaiyil (பிரிவுகள் என் பார்வையில்)

சிறகிலிருந்து பிரியும் ஓர் இறகு
மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை
மேகத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளி


ஏனோ வார்த்தைகளின்றி ஊமையான இவற்றால்
சத்தமாய் அறிவிக்க முடியும் நிஜங்களை


விரிந்த சிறகில் சேர்ந்து அந்த இறகு வானில் பறந்த நாட்கள் பொய்யன்று
தனியாய் உதிர்கையில் காற்றில் அது எழுதிச் செல்லும்
நினைவுகளின் காவியமும் பொய்யன்று

அடர்ந்த மரத்துடன் சேர்ந்து இலை துளிர்த்து பசுமையில் திளைத்தது செழித்தது பொய்யன்று
அதே மரத்தின் உரமாய் மாற வாடி உதிர்கையில் அது வரைந்து செல்லும் பிரிவின் துயர் பொய்யன்று

நீல மேகத்தின் பரப்பில் அந்த தூய நீர்துளி மிதந்த கதை பொய்யன்று
உலகம் மகிழ அது தன்னைப் பிரித்து உவர் கடலில் விழும் காட்சியும் பொய்யன்று

இனிய இறந்தகால பக்கங்களின் மனிதர்களும் மகிழ்வுகளும் நிகழ்வுகளும் நட்புகளும் நானும் பொய்யன்று

இந்த நிகழ்காலத்தில் தொடரும் மாறா நினைவுகளும் பிரிவுகளும் மாற்றங்களின் தேவைகளும் பொய்யன்று

Popular Posts