சிறகிலிருந்து பிரியும் ஓர் இறகு
மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை
மேகத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளி
ஏனோ வார்த்தைகளின்றி ஊமையான இவற்றால்
சத்தமாய் அறிவிக்க முடியும் நிஜங்களை
விரிந்த சிறகில் சேர்ந்து அந்த இறகு வானில் பறந்த நாட்கள்
பொய்யன்று
தனியாய் உதிர்கையில் காற்றில் அது எழுதிச் செல்லும்
நினைவுகளின் காவியமும் பொய்யன்று
அடர்ந்த மரத்துடன் சேர்ந்து இலை துளிர்த்து பசுமையில்
திளைத்தது செழித்தது பொய்யன்று
அதே மரத்தின் உரமாய் மாற வாடி உதிர்கையில் அது வரைந்து
செல்லும் பிரிவின் துயர் பொய்யன்று
நீல மேகத்தின் பரப்பில் அந்த தூய நீர்துளி மிதந்த கதை
பொய்யன்று
உலகம் மகிழ அது தன்னைப் பிரித்து உவர் கடலில் விழும்
காட்சியும் பொய்யன்று
இனிய இறந்தகால பக்கங்களின் மனிதர்களும் மகிழ்வுகளும்
நிகழ்வுகளும் நட்புகளும் நானும் பொய்யன்று
இந்த நிகழ்காலத்தில் தொடரும் மாறா நினைவுகளும்
பிரிவுகளும் மாற்றங்களின் தேவைகளும் பொய்யன்று